×

கொடைக்கானல் மேல்மலையில் கட்டுக்குள் வந்தது காட்டுத் தீ: சேதமடைந்த மின்கம்பம், மின்வயர்கள் சீரமைப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் கடந்த 4 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ இன்று கட்டுக்குள் வந்தது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பங்கள், மின்வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களுக்கு முன் காட்டுத் தீ பரவியது. இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டுத் தீ பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.

கடந்த 4 நாட்களாக தொடர்ந்து காட்டுத் தீ பரவியது. இதனால், சுமார் 500 ஏக்கர் பரப்பில் பழமையான மரங்கள் மற்றும் செடிகள் தீயில் கருகின. மேலும், காட்டுத் தீயால் இந்தப் பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பங்கள், மின்வயர்களும் சேதம் அடைந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், காட்டு தீயின் தாக்கம் நேற்று நள்ளிரவு முதல் படிப்படியாக குறைந்தது. இதையடுத்து, சேதமடைந்த மின்வயர்கள் மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து, மலைக் கிராமங்களுக்கு படிப்படியாக மின்விநியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கொடைக்கானல் மேல்மலையில் கட்டுக்குள் வந்தது காட்டுத் தீ: சேதமடைந்த மின்கம்பம், மின்வயர்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,uphill forest fire ,Boomaparai ,Mannavanur ,Dindigul district ,uphill ,Dinakaran ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...